EN
Local

திருகோணமலை வைத்தியசாலையில் சிசு மரணம் – வைத்தியர்கள் இருவர் பணி இடைநீக்கம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் இரு வைத்தியர்களை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியரும் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியருமே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரசவத்தின்போது சிசு மரணமடைந்த சம்பவம் தொடர்பில் அந்த அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரசவத்தின்போது ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக, இரு வைத்தியர்களையும் பிரசவ அறைக்கு வருமாறு கோரி 6 முறை தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியும் அவர்கள் அந்த நேரத்தில் அங்கு வரமையினால் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அதேவேளை, குறித்த இரு வைத்தியர்களும் அந்த நேரத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிசேரியன் ஒன்றில் ஈடுபட்டிருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சுகாதார அமைச்சு ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் முறையான ஒழுக்காற்று விசாரணையை சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

Related Articles

Back to top button